மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பெருமைமிகு இதழான கதம்பதம் ஆசிரியரின் அன்பான வணக்கங்கள்!
“உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நெரிக்கப்படுகிறது என்று பொருள்” – இது ஒரு பிரெஞ்ச் பழமொழி. நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை மதிக்க மட்டுமல்ல கொண்டாடுவதையே தன்
தலையாயக் கடமையாக நினைத்து செயல்படுகிறது கதம்பம் இதழ்.
கதம்பம் இதழ் கிட்டத்தட்ட 1000 மிச்சிகன் தமிழ் குடும்பங்கள் விரும்பி படிக்கும் ஒரு காலாண்டு இதழ் என்பது நாம் அறிந்ததே. இந்த பெருமை மிகு இதழை உங்கள் படைப்புகளால் மேலும் பெருமைப்படுத்துங்கள்.
● சிறுகதைகள்
● கவிதைகள்
● தமிழ் இலக்கியம்
● தன்னம்பிக்கை கட்டுரைகள்
● தடம் பதித்த வாழ்க்கை வரலாறு
● உடல் மற்றும் மன நலம் பேண ஆலோசனைகள்
● நினைவலைகள் மற்றும் உங்கள் நெஞ்சில் நின்ற சுய அனுபவங்கள்
● நீங்கள் வியந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
● தொழில் மற்றும் வர்த்தகம்
● விளையாட்டு குறித்த கட்டுரைகள்
● துணுக்குகள் – படித்ததில் பிடித்தவை , நகைச்சுவை
● சமகால சமுதாயத்தில் நீங்கள் விரும்பும் மாற்றங்கள்
மேல்குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு பயன்படும் எந்த ஒரு படைப்பையும் பரிசுரிக்க தயாராக உள்ளோம்.
இது தவிர மாணவர் கதம்பத்தை அலங்கரிக்க உங்கள் குழந்தைகளின் படைப்புகளை பகிர்ந்திடுங்கள் – ஓவியம்/கதை/சுய அனுபவங்கள்/வேறு எதுவாக இருந்தாலும் நலமே. அவர்களை தமிழ் வாசிக்கவும், எழுதவும்
தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.
மேலும் ஒரு புதிய முயற்சியாக வட்டாரக் கதம்பத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறோம் – நாம் எல்லோரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இங்கு வாழ்கிறோம். பலருக்கு தங்கள் பகுதியை தவிர்த்து
மற்ற பகுதிகளை பற்றி அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. மற்ற பகுதிகளை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக நீங்கள் உங்கள் வட்டார சிறப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள். வட்டார சிறப்புகள்
என்பது உங்கள் மண்,மனிதர், மொழி , ஆளுமைகள், உணவு வகைகள் மற்றும் அதன் செய்முறைகள், சுற்றுலா தளங்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
படைப்புகள் அனைத்தும் Google Docs / MS Word இல் தட்டச்சு செய்திருத்தல் அவசியம். உங்கள் படைப்புக்கு வலு சேர்க்கும் புகைப்படமோ ஓவியமோ இருந்தால் அதையும் இணைத்தே அனுப்புங்கள். மேலும் உங்கள் புகைப்படம்
மற்றும் இருப்பிடம் குறித்த விவரங்களையும் சேர்த்து kadhambam@mitamilsangam.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
இது உங்களுக்கான இதழ் – உங்கள் தயக்கங்களை ஒதுக்கி வைத்து உங்கள் படைப்புகளை பகிர முன்வாருங்கள்.
சிறந்த படைப்புகள் ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு நமது அடுத்தடுத்த இதழ்களில் பிரசுரிக்கப்படும்.
தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!
வாழ்க தமிழ்!
நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணன் மார்த்தண்டராஜ்