அன்புடையீர், வணக்கம்!

கருத்தாழமிக்க நம் கன்னித் தமிழுக்கு;

ஆய்ந்தறிந்த பொக்கிசம் கொண்ட நம் அறிவியல் தமிழுக்கு;

சங்கம் பல கண்ட நம் சங்க தமிழுக்கு;

வருங்காலமும் கணித்த நம் வன்தமிழுக்கு;

தம்மை, தம் எழுத்தை அர்ப்பணித்த எமதருமை வாசகர்களே;

உங்கள் கருத்தாழமிக்க படைப்புகளுக்காக களமிறங்கியிருக்கும் கதம்பமாகிய எனக்கு உங்கள் படைப்புகள் எதுவாகினும் அனுப்பிடுவீர்.

படைப்புகள் பற்றி:

1. கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம். 

2. கற்பனைக்கொரு சவால் இதோ… 

“கடகடவென ஆறு மாதமும் ஓடிவிட , திருமணமும் முடிந்து விட்டது. அடுக்கு மாடிக் குடியிருப்பு 17வது மாடி கட்டடம். மின்சாரம் இல்லன்னா அதோ கதிதான். வீட்டில் உள்ள சொந்தங்கள் எல்லாம் விட்டு பிரிந்த பிறகும் கூட அவனின் அன்பான அரவணைப்பால் அவள் தன் ஊரை பிரிந்ததை பெரிதாக உணர வில்லை. அனால் இன்றோ… திருமணத்திற்காக எடுத்த விடுமுறை முடிந்து அலுவலகம் செல்லவேண்டிய நாள். காலையில் எழுந்து கயல் சமைத்துக் கொடுக்க அவசரஅவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டான் அவனும். ‘கயல் பத்திரமா இரு.யார் வந்தாலும் கதவைத் திறக்காதே’. இது உங்க ஊர் மாதிரி கிராமம் அல்ல. ஏதும் அவசரம் என்றால் மட்டும் குறுந்தகவல் அனுப்பு. நான் நேரம் கிடைக்கும் போது அழைப்பேன். என விதிமுறைகள் விதித்து விட்டு போனான். கயல் எதுவும் பேசவில்லை அவளால் பேசமுடியவில்லை என்று தான் சொல்லனும். துக்கம் தொண்டையை அடைக்க… அவள் எச்சில் கூட விழுங்கும் போது வலித்தது. பொங்கிவந்த கண்ணீரை முடிந்தவரை தடுத்தவளாய்.. அந்த வீட்டில் அவள் ஒரு …”கதம்பம் வாசகர்களே! இதோ இந்த பத்தியை தொடக்கமாகக் கொண்டு ‘வழியோரம் விழி! விழியோரம் அருவி!!’ என்ற தலைப்பில், சிறுகதைகளை அனுப்பிடுவீர். உங்கள் சிந்தனை சோலையில்  பூக்கும் அரும்பு ‘வழியோரம் விழி! விழியோரம் அருவி!!’ என்ற தலைப்பில் கவிதையாகக் கூட இருக்கலாம்.

குழந்தைகளே! உங்களுக்கான சவால் இது!

“இப்படி சாப்பிடு… சாப்பிடுன்னு கஷ்டப்படுத்துவதற்கு பதிலா அதை ஒரு மாத்திரையாவே கொடுத்திடலாம் போல… என சலித்துக்கொண்டே கவிதா சொன்னதைக் கூர்ந்து கேட்டான் பாலு. பல நாள் எட்டி எட்டி இலைகளைப் பறித்து சாப்பிட்டதால் நீண்ட கழுத்தோடு ஒட்டகச் சிவிங்கி உருவாகி இருக்கலாம்.. என ஆசிரியர் கூறியது நினைவுக்கு வந்தது. அப்போ நாமும் இப்படி மாத்திரையை மட்டுமே சாப்பிட்டா?...என்று பல கேள்விக்கணைகளோடு படுக்கச்சென்ற பாலுவுக்கு…” குழந்தைகளே! இந்த கதையை உங்கள் கற்பனையினால் பூர்த்தி செய்து கதம்பத்திற்கு அனுப்புங்க. பொருத்தமான தலைப்பு கொடுக்க மறந்திராதீங/்க!!

பெரியவர்களின் கதை 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும்; சிறியவர்களின் கதை 750 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்கட்டும். ஒவ்வொரு பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முதல் மூன்று படைப்பாளிகள் வரும் நமது தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் போது சிறப்பிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். கதம்பம் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

3. சிறுவர்களுக்கான பகுதி: 

உங்கள் குழந்தைகளின் படைப்புகள் ஓவியங்கள் ,குட்டிக்கதைகள், நகைச்சுவைகள், புதிர்கள், அறிவியல் பகுதி, இளம் சாதனையாளர்கள் என எதுவாகினும் தமிழில் எழுதி அனுப்ப அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.படைப்புகள் குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று. பெரியவர்களும், சிறுவர்களுக்கான  நன்னெறிக் கதைகள், கதை- படம்- விளக்கம் அறிவியல் கண்டு பிடிப்புகள் என புதிய சிந்தனையோடு, குழந்தைகளை ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுவதாகவும்,அவர்களின்  தமிழ் அறிவை வளர்க்க உதவும் வகையிலுமுள்ள   படைப்புகளை அனுப்பலாம்.

4. வாசகர் கடிதம் :

‘இது உங்கள் பக்கம்’ என கதம்பத்தில் உங்களது கருத்து பின்னூட்டத்திற்காக ஒருபகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கதம்பத்தில் உங்களுக்கு பிடித்த பகுதியையும் அதைப்பற்றிய கருத்துகளையும் எனக்கு எழுதி அனுப்பலாம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

5. பாரம்பரிய சமையல், ஆரோக்கிய சமையல் பற்றி எழுதி அனுப்பலாம்.

6. அறிவியல் படைப்புகள், நகைச்சுவைகள் , துணுக்குகள், விடுகதைகள் மற்றும் புதிர்கள் வரவேற்கப்படுகின்றன.

7. நிகழ்ச்சியின் நினைவலைகள்: தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகள் உங்கள் நினைவுக்குள் பதிந்தது மட்டுமல்லாமல் கதம்பத்திலும் பதிவிறக்கம் பெற்று காலப்பெருங்கடலில் கரைந்து போகாமல் நிரந்தரமாய் இடம் பெற உங்கள் படைப்புகளை கவிதை வடிவிலோ அல்லது கட்டுரை வடிவிலோ அனுப்பிடுவீர்

8. படைப்பாசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை :

படைப்புகளை அனுப்பும்போது தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். தங்கள் படைப்பினை அனுப்பிய பின் அது கிடைத்ததற்கான பதில் வரவில்லையெனில் உடனே இதழாசிரியரை 248-571-3904 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.(குறிப்பு: படைப்புகள் அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை இதழாசிரியருக்கு உண்டு)

படைப்புகளை அனுப்புவதற்கு கடைசி நாள்: டிசம்பர் 15,2018

மின்னஞ்சல் முகவரி(Email) : kalaiarasy.mts.2018@gmail.com

எதிர்பார்ப்புடன்,

வழி மேல் விழி வைத்து காத்திருப்பது!

உங்கள் கதம்பம்.

திருமதி: கலையரசி சிவசுந்தரபாண்டியன்

கதம்பம் இதழ் ஆசிரியர் 2018-19

மிச்சிகன் தமிழ்ச் சங்கம்.

தமிழா விழி! தமிழே நம் விழி!!