பொன்விழா செயற்குழுவின் முதல் நிகழ்வாக கோடை விழாவை நம்முடைய தமிழ் சொந்தங்களுடன் வெற்றிகரமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். மேம்பரி பூங்காவில்(Maybury Park) மக்கள் காலை 11:30 மணி அளவில் திடலுக்கு வர ஆரம்பித்தார்கள. நண்பகல் வேளையில், மக்கள்திரளில் திடல் திக்குமுக்காடியது என்றால் மிகையல்ல.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வித்தியாசமான உணவுகளை சமைத்து கொண்டு வந்தனர்.பல்வேறு வகையான உணவுகள், அதில் புலவ், சாம்பார், கறி, வடை, பஜ்ஜி, பிரியாணி,பீட்சா, பாஸ்தா, தயிர் சாதம் மற்றும் பல இனிப்புகள் இருந்தன. ஒவ்வொரு உணவிலும் நமது பாரம்பரிய சமையல் சுவையும் மணமும் நிறைந்திருந்தது.
தமிழ் சொந்தங்கள் கொண்டு வந்திருந்த பல் கூட்டு உணவை உண்டுக் களித்தவுடன் நம்முடன் கோடை விழாவை குதூகலமாக்க வந்திருந்த அன்பு சகோதரி செல்வி.ஜோதி கலை அவர்களின் இசை நிகழ்ச்சி தொடங்கியது.அவர் நிறைய தமிழ் பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்தார்,வயலின் இசைக்கருவியில் தமிழ் பாடல்களை வாசித்துக் காட்டினார் மற்றும் மிச்சிகன் தமிழ் மக்களுடன் இணைந்து பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்று அவரின் பின்னணியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தினர்.செல்வி.ஜோதி கலை அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு ரசித்துக் கொண்டு இருந்தனர். இசை நிகழ்ச்சியின் நிறைவாக செயற்குழு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக “கலைவளர்மாமணி” என்ற விருதினை வழங்கிச் சிறப்புச் செய்தனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் பலவிதமான விளையாட்டுகளை ஏற்பாடு செய்தோம்.சிறிது நேரத்தில்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் காத்திருந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது.மிகுந்த உற்சாகத்துடன் குழந்தைகளும் மற்றும் பெரியவர்களும் இவற்றில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களுக்கு வேடிக்கையாகவும்,நகைச்சுவையாகும் இருந்தது.விளையாட்டுப் போட்டிகளுக்கு இணை நிகழ்ச்சியாக குழந்தைகள் முதல் பெரியவர்களின் பின்னணி இசைக்கோர்வையுடன் கூடிய பாடல் நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இறுதிவரை திடலில் இருந்து கோடை விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு செயற்குழுவின் சார்பாக பரிசளிக்கப்பட்டது.செயற்குழுத் தலைவர் அவர்கள் பொன்விழா செயற்குழுவையும், துணைத் தலைவர் அவர்கள் பொன்விழா இளையோர்
குழுவையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.இறுதியாக செயற்குழுச் செயலாளர் அவர்கள் நன்றி உரையாற்ற விழா இனிதே முடிந்தது.உணவின் ருசியும், விளையாட்டுகளும், வேடிக்கைகளும் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்த நிகழ்வை சிறப்பாக மாற்றின.
எந்த ஒரு நிகழ்ச்சியின் வெற்றியும் கூட்டு முயற்சியால் விளைவதுதான். அனைவரும் ஒற்றுமையுடன் கூட்டாக செயல்பட்டதன் விளைவாக இந்த வெற்றியைப் பெற்று இருக்கிறோம்.இது மென்மேலும் தொடர வேண்டும்.
இந்நிகழ்ச்சிக்கு உணவைக் கொண்டு வந்த அன்பு தமிழ் உறவுகளுக்கும்,விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், நம்முடைய விளம்பரதாரர்களுக்கும், அங்காடி மற்றும் விற்பனையாளர்களுக்கும், மேலும் இந்த கோடை விழாவை குதூகலமாக்கிய இளம் சாதனையாளர் செல்வி.ஜோதி கலை அவர்களுக்கும் மிச்சிகன் தமிழ் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கோடை விழாவின் வெற்றி என்பது நம் அனைவரின் கூட்டு முயற்சியால் விளைந்த வெற்றி.எதிர்வரும் அனைத்து நிகழ்வுகளையும் வெற்றி விழாக்களாக்க தொடர்ந்து முயற்சிப்போம். நன்றி.