Ponvizha Pongal 2025

மஞ்சள் கொத்தோடு

மாமரத்து இலையோடு

இஞ்சித் தண்டோடு

எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை

வாயெல்லாம் பால்பொங்க

பட்டுப் புதுச்சோறு

பொங்கிவரும் பொங்கலிது

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாப் பொங்கலிது!

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாப் பொங்கல் கொண்டாட்டம் பெரும் எதிர்பார்ப்புடனும் மிச்சிகன் வாழ் தமிழ் மக்களின் பேராதரவுடன் பிப்ரவரி மாதம் 8-ம் நாள் சனிக்கிழமை அன்று லேக் ஓரியன் (Lake Orion) மேல் நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடந்தேறியது!

பொன்விழாப் பொங்கலுக்கு வருகைத்தந்த மிச்சிகன் வாழ் தமிழ் மக்களை வரவேற்க  அரங்கத்தின் முகப்பு பொங்கலை குறிக்கும் வண்ணம் வண்ண கோலங்கள் போட்டு, திருவள்ளுவர் சிலையும் வைத்து, மாடு, கரும்பு உள்ளிட்டவையுடன் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. செயற்குழு மற்றும் இளையோர் குழு உறுப்பினர்கள் பன்னீர் தெளித்து, பூக்கள் கொடுத்து எல்லோரையும் வரவேற்றனர். அங்கு அமைக்கப்பட்ட  புகைப்பட அலங்காரக்கூடத்தில் குடும்பத்துடன் எல்லோரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

தமிழ்நாட்டு பாரம்பரியத்திலும், விருந்தோம்பலிலும் இன்று வரை முதன்மையான இடத்தில இருப்பது தலைவாழை இலை விருந்து தான். மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாப் பொங்கலிலும் இது விதிவிலக்கல்ல. தமிழ்ச்சொந்தங்களின் வயிறும் , மனமும் நிரம்பும் வண்ணம் தலைவாழை இலை விருந்து தன்னார்வலர்களின் பேருதவியோடு பரிமாறப்பட்டது. உணவு கூடத்திற்கு சென்று, திரும்பும் வழி நெடுக பற்பல அங்காடிகளும் , வணிக நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் பேரார்வத்துடன் இந்த அங்காடிகளில் பொருட்கள் வாங்கி மகிழ்ந்தனர்.

மாலை நடக்கவிருந்த இன்னிசை நிகழ்ச்சிக்கு வேண்டி மேடை அமைவு சிறப்பாக செய்து முடித்தவுடன் அரங்கம் பொன்விழாப் பொங்கலுக்கு தயாரானது. அறுசுவை உணவு உண்ட திருப்தியுடன் மக்கள் பெருந்திரளாக அரங்கத்தில் வந்தமர்ந்து கலைநிகழ்ச்சிகளைக் காண தயாராயினர். குத்துவிளக்கேற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்கள் பாடப்பட விழா இனிதே துவங்கியது. 

வரவேற்புரை முடிந்தவுடன், முதலில் பாட்டுப்பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மிச்சிகன் வாழ் தமிழ் மக்களில் இத்தனை இனிமையாக பாடும் திறமை உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன் நடன நிகழ்ச்சிக்கு சென்றோம். சிறியவர் முதல் பெரியவர் வரை வண்ண உடை அணிந்து, மின்னும் விளக்குகளில், துள்ளல் இசைக்கு, சிறப்பான முறையில் நடனம் ஆடினார்கள். இதை பார்க்க கன் கொள்ளா காட்சியாக இருந்தது. இடையில் நகைச்சுவை நாடகம் ஒன்றும் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒவ்வொருவருக்கும் கேடயம் கொடுக்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவில் விளம்பரதாரர்களை கவுரவித்தல், புகைப்படம் எடுக்கும் தன்னார்வளர்களுக்கு கேடயம் வழங்குதல், நாளைய நட்சத்திர பேச்சுப்போட்டியில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை வழங்குதல் முதலிய நிகழ்வுகளும் அரங்கேறின. அடுத்து மிச்சிகன் தமிழ்ச் சங்க பொன்விழா செயற்குழு தலைவர் திரு. திருமலைஞானம் சிவஞானம் தலைவர் உரை நிகழ்த்தினார். தலைவர் உரையில் வரும் சூலை மாதம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது பொன்விழவை சிறப்பாக கொண்டாட இருப்பதாகவும் அதற்கு மிச்சிகன் வாழ் தமிழ் மக்களின் பேராதரவை கொடுக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். அடுத்து அறங்காவலர் குழு முன்னிலையில் மிச்சிகன் தமிழ்ச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த நிதி ஆண்டின் கணக்கு வழக்குகள் பொது மக்கள் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டன.

அடுத்து சிறப்பு நிகழ்ச்சியாக பறை இசை நிகழ்ச்சி. தமிழரின் ஆதி இசையாம் பறை இசை நிகழ்ச்சி இல்லாமல் மிச்சிகன் தமிழ்ச் சங்க பொங்கல் கொண்டாட்டம் நிறைவு பெற்றதில்லை. இந்த ஆண்டும் டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் திரு. பிரபாகரன் தலைமையில் 25- கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் சுமார் 20 நிமிடங்கள் இடைவிடாத அடைமழை போல் பறை இசை இசைத்து அசத்தினர். மேடையில் பறை இசைக் கலைஞர்கள் அடவு கட்டி ஆட, மேடைக்கு கீழ் பார்வையாளர்களும் அவர்களின் தாளத்திற்கு ஈடு கொடுத்து பெரும் ஆரவாரத்துடன் ஆடி மகிழ்ந்தது காண கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பறை இசைக் கலைஞர்களுக்கு செயற்குழு சிறப்பு பட்டயமும், கோப்பைகளும் வழங்கி மகிழ்ந்தது.

பறை இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் சார்பில் குலுக்கல் சீட்டு வங்கியவர்களில் ஒரு சிலர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் பெற்றனர். அடுத்து நமது விளம்பரதாரர் மாஞ்சில் designs சார்பில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்து பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய தேனீர் இடைவேளை கொடுத்து விட்டு மேடை இன்னிசை நிகழ்ச்சிக்குத் தயார் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பிரபல பின்னணிப் பாடகர் திரு.தேவன் ஏகாம்பரம் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தேவனுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான கிருஷ்ணா மற்றும் மஹீஷா, இசைக்குழுவின் நேரடி இசையில் அட்டகாசமான இசை நிகழ்ச்சியை வழங்கினர். இறுதியில் பறை இசைக் குழுவுடன் தேவன் குழுவினர் இணைந்து கொடுத்த இணைவு இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. செயற்குழு திரு தேவனுக்கு சிறப்புப் பட்டயமும், இசைக்குழுவின் மற்ற கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் கேடயம் வழங்கி கவுரவப்படுத்தியது.

நிகழ்ச்சி பொன்விழா செயற்குழு செயளாலர் திரு.விஜய் வெங்கடசுப்ரமணியனின் நன்றி உரையுடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவிய விளம்பரதாரர்கள், செயற்குழு, இளையோர் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், முக்கியமாக பெருந்திரளாக வந்து சிறப்பித்த மிச்சிகன் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 

அன்றே மறப்பது நன்று ( குறள் 108)

Leave a reply