
நம் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் (MTS) எத்திக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்!!’
நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெறும் முக்கிய கொண்டாட்டம், நம் “எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி 2025” கொண்டாட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி தங்களின் பேராதரவுடன் நவம்பர் 9ஆம் தேதி, தர்ஸ்டன் (Thurston) உயர்நிலைப்பள்ளியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அரங்கம் நிறைந்த நம் தமிழ் மக்களும், வயிறும் மனமும் நிறைய அறுசுவை உணவுகளும், புகைப்பட அலங்காரக் கூடமும், வண்ண வண்ணக் கோலமும், நடைப்பாதையில் அமைந்த அங்காடிகளும், உபயதாரர்களின் கூடமும், தமிழ் உறவுகளின் அன்பினால் Thurston உயர்நிலைப் பள்ளியே விழாக்கோலம் பூண்டது. இந்த உற்சாகம் மிச்சிகன் தமிழ் சங்கத்தின் (MTS) எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி 2025 நிகழ்ச்சியின் சிறப்பை எடுத்துக் காட்டியது என்றால் அது மிகையல்ல.
நம் மிச்சிகன் தமிழ் உறவுகள் நுழைவாயிலில், செயற்குழு மற்றும் இளையோர்க்குழு உறுப்பினர்களிடம் தங்களின் பதிவுச் சீட்டைப் பெற்று, புகைப்பட அலங்காரக் கூடத்தில் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் விதவிதமான சைவ, அசைவ உணவுகளை வயிறு குளிர உண்டு களித்து, நம் MTS அங்காடியிலும், உபயதாரர்களின் கூடத்திலும் தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி, மன மகிழ்ச்சியோடு நம் அரங்கத்தை வந்தடைந்தனர்.
குத்துவிளக்கேற்றி, தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடி பெரியவர்களும் குழந்தைகளும் விழாவைத் துவக்கி வைத்தனர். வரவேற்புரையுடன் கலை நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது. பெரியோர், சிறியோர் என அனைவரும் நடனம், பாடல் எனப் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி சிறப்பான கொண்டாட்டத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதன் நடுவே புதிய அறங்காவலர்க்குழு, புதிய இளையோர்க்குழு, தேர்வுக்குழு, தமிழ்ப் பள்ளி,நிர்வாக அலுவலர்கள் குழு, தன்னார்வலர்கள், உபயதாரர்கள் என அனைவரையும் மேடையேற்றி அழகு பார்த்தது நம் மிச்சிகன் தமிழ்ச்சங்கப் பொன்விழா செயற்குழு.
இம்முறை புதிய ‘ஷார்ட்ஸ் எடு ரீல்ஸ் போடு’ என்ற போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ரீல்ஸ் (reels) மேடையில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தது. மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறந்து விளங்கியோர் கௌரவிக்கப்பட்டனர்,
கொலுப் போட்டியின் வெற்றியாளர்கள் மேடையில் அறிவிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர்.சிறுவர்கள் பேச்சுப் போட்டியில் வென்ற வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஃபெட்னா (FeTNA) தமிழ்த்தேனீ, குறள்தேனீ மற்றும் அறிவியல் தேனீ போட்டிகளில் நம் MTS தமிழ்ப்பள்ளி சார்பாக கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கிய சிறுவர்களுக்குச் சிறப்புப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக மிச்சிகன் தமிழ் தொழில் முனைவோர் கருத்தரங்கம் (MiTEN) பற்றிய சிறப்புத் தகவல்களும், மிச்சிகனில் உள்ள தமிழ் தொழில்முனைவோருக்கான முக்கியத்துவமும் இந்த விழாவில் எடுத்துரைக்கப்பட்டது. MiTEN-இன் சிறப்பு விருந்தினர்களாக திரு. சிவா மூப்பனார் மற்றும் திரு. வீரா வேணுகோபால் ஆகியோர் பங்கேற்று கௌரவிக்கப்பட்டனர். மிச்சிகன் தமிழ்ச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு MiTEN ஆற்றும் பங்களிப்புக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது.
மிச்சிகன் தமிழ் சங்கத்தின் (MTS) எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி 2025 கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி, நமது சிறப்பு விருந்தினர்களான உலகப்புகழ்ப் பெற்ற நகைச்சுவை நட்சத்திரங்கள் திரு. மதுரை முத்து மற்றும் திருமதி. அன்னபாரதி ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சி மிகுந்த ஆரவாரத்துடன் குழந்தைகளை கவரும் வண்ணம் இனிதே தொடங்கியது. அவர்களின் நகைச்சுவைப் பேச்சால் எழுந்த சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது. நம் தமிழ் உறவுகள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து, மனமகிழ்ச்சியில் திளைத்தனர்.
கலைநிகழ்ச்சிகள் நிறைவுற்ற பிறகு, விழா இறுதியாக DJ இசையுடன் உற்சாகமான நடனமாடி மகிழ்ந்தனர்! MTS உறவுகள் அனைவரும் பாடல்களுக்கு ஏற்ப ஆடிப் பாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.கலந்து கொண்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் இனிப்புப் பலகாரத்தடன் கூடிய பரிசுப் பை வழங்கப்பட்டது. விழாவின் இறுதியாகச் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்து, நன்றி உரையோடு நிறைவு பெற்றது!
“எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி 2025” நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், கலை நிகழ்ச்சி இயக்குனர்களுக்கும், கலைஞர்களுக்கும், உபயதாரர் மற்றும் விளம்பரதாரர்களுக்கும், அலங்காரக்குழுவிற்கும், புகைப்படக்குழுவிற்கும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு சார்பாக எங்களது உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!!!