அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே,
“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்” – திருக்குறள் 462
தேர்ந்து தெளிந்த நிர்வாகச் சுற்றத்தோடு தான் செய்யவிருக்கும் செயலை ஆராய்ந்து செய்பவருக்கு
முடியாத செயல் என்று எதுவும் இல்லை என்கிறது வள்ளுவம் . ஆம், நம் தாய்த்தமிழ் நாட்டிலிருந்து
கடல் கடந்து புலம்பெயர்ந்த நம் முன்னோடிகளால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மொழி காக்கும்
கருவிகளாம் கலை, பண்பாடு மற்றும் இலக்கியத்தை வளர்த்தெடுக்கத் தோற்றுவிக்கப்பட்டதுதான்
நம்முடைய மிச்சிகன் தமிழ்ச் சங்கம். அன்றைக்கு நன்மக்களால் நல்லெண்ணத்தில்
உருவாக்கப்பட்ட நமது சங்கம் இன்றைக்கு ஆல்போல் வளர்ந்து, அருகு போல் வேரூன்றி
புலம்பெயர்ந்தத் தமிழர்களின் முகவரியாக நிற்கிறது. இப்பெருமைமிகு தமிழ்ச் சங்கத்தின்
பொன்விழா ஆண்டில் நானும், எனது செயற்குழு உறுப்பினர்களும் நம் தமிழ்ச் சமூகத்திற்கு
தன்னார்வத் தொண்டாற்ற வந்திருப்பதை எண்ணி பெருமைக் கொள்கிறோம்.
பொதுவாக ஒரு அமைப்பு அரைநூற்றாண்டைக் கடந்து பயணிப்பது என்பது கடந்த
அரைநூற்றாண்டில் இந்த அமைப்பிற்காக போராடிய, தன்னார்வப் பணியாற்றியத்
தன்னார்வலர்களின் அசாத்திய உழைப்பின்றி, சங்க உறுப்பினர்களின் ஆதரவுமின்றி இது
சாத்தியமில்லை. ஒரு அமைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பது என்பது ஒரு தொடர் ஓட்டப்
பந்தயத்தைப் போல என்ற கருத்தை நெஞ்சில் நிறுத்தி, கடந்த காலத் தன்னார்வலர்களின்
உழைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு தொடர்ந்து நம்முடையச் சங்கத்தை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற இப்பொன்விழாச்
செயற்குழு தொடர்ந்து பாடுபடும் என்பதை மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
பொன்விழாச் செயற்குழு பொறுப்பேற்றதும் முதல் நிகழ்ச்சியாக கோடை விழாவை நம்முடையச்
சுற்றத்தோடு சிறப்பாகக் கொண்டாடி முடித்திருக்கிறோம். நம்முடைய தமிழ்ச் சங்கத்தின் சார்பாக
“தமிழராய் ஒன்றிணைவோம் இந்தியர் என்பதில் பெருமைக் கொள்வோம்” என்ற முழக்கத்துடன்
விடுதலைத் திருநாளை மையப்படுத்தி நடக்கும் இந்திய நாள் கொண்டாட்டத்தில் கலந்துக்
கொண்டோம். இன்னும் இதுப் போன்ற எத்தனையோ நிகழ்ச்சிகளை நம்முடையத் தமிழ்ச் சங்க
உறுப்பினர்களின் ஆசியுடனும், துணையுடனும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது, உங்களின்
ஆதரவு செயற்குழுவிற்கு என்றைக்கும் தேவை. நம்முடைய சங்கம் நடத்தும் அனைத்து
நிகழ்ச்சிகளிலும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
கலை,பண்பாட்டின் வழியாக நம் மொழியை வளர்ப்பதையும், நம் தமிழ் உறவுகளின் இணைப்பை
பலப்படுத்துவதையும் இலக்காக கொண்டு செயல்படுவோம்.
இந்தப் பொன்விழா ஆண்டில் தமிழ் உறவுகளோடு கூடி குலாவும் விதத்தில் புத்தம்புது
நிகழ்ச்சிகளைச் சிறப்பான முறையில் திட்டமிட்டு பொறுப்பான முறையில் செயல்படுவோம்.
நன்றி.